மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கோவையில் வெள்ளபகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:
வரும் காலங்களில் எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள வேண்டும். ஏற்கனவே மழை தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதை விரைவு படுத்தவே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இன்னும் அதிக மழை பெய்தாலும் பொதுமக்களை
பாதிக்காதவாறு நம்முடைய நடவடிக்கைகள் இருக்க வேண்டும். பணிகளை சிறப்பாக, சீரிய முறையில் செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். துணை முதல்வரும் அதைத்தான் தெரிவித்து உள்ளார். எனவே அனைத்து துறையினரும் இணைந்து தீவிரமாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார்பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.