தமிழ்நாடு கவர்னர் ரவி, மாநில பாடத்திட்டம் குறித்து விமா்சனம் செய்திருந்தார். இதற்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் இன்று பதில் அளித்து உள்ளார். அவர்கூறியதாவது:
கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்ய விரும்பினால், கவர்னர் மாநில கல்வித்திட்டதில் படித்த மாணவர்களிடம் பரிசோதித்து கொள்ளட்டும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை விட தமிழக பாடத்திட்டம் சிறப்பாக உள்ளது. தேசிய பாடத்திட்டத்துடன் ஒப்பிடும் போது மாநில பாடத்திட்டம் தரமாக உள்ளது.
நான் இதுவரை 180 தொகுதிகளில் ஆய்வு செய்திருக்கிறேன். நான் ஆய்வு செய்ய செல்லும்போது அங்குள்ள பொது நூலகங்களுக்கு செல்வேன். அப்போது அங்கு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிறவர்களிடம் ஏதாவது குறைகள் இருக்கிறதா, நூல்கள் தேவையான அளவு இருக்கிறதா என கேட்டபோது, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான ஸ்டேட் போர்டு பாட புத்தகங்கள் இன்னும் ஒரு செட் வையுங்கள். தேர்வுகளில் அதில் இருந்து தான் அதிகம் கேள்விகள் வருகிறது என்கிறார்கள். குடிமைப்பணி தேர்வு எழுதுகிறவர்களும் தமிழ்நாடு அரசு பாடப்புத்தகளையே விரும்பி படிக்கிறார்கள். போட்டித்தேர்வுகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களே அதிகம் தேர்ச்சி பெறுகிறார்கள்.
ஆளுநர் விரும்பினால் நான் அவரை ஒரு நூலகத்துக்கு அழைத்து சென்று காட்ட தயாராக இருக்கிறேன்.
மும்மொழி கொள்கையை நாம் ஏற்க மறுப்பதால் மத்திய அரசு கல்விக்கான நிதி ஒதுக்க தயாராக இல்லை. இதுபற்றி 2 முறை மத்திய அமைச்சரிடம் பேசி விட்டோம். அவர் மும்மொழி கொள்கையை ஏற்பதாக கையெழுத்திடுங்கள் அடுத்த அரைமணி நேரத்தில் நிதி அனுப்புகிறோம் என்கிறார்.
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் மட்டத்தில் டில்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களும், மத்திய அரசு நிதி தர தயாராக இல்லை என கூறிவிட்டனர். இது குறித்து முதல்வரிடம் நாங்கள் ஒவ்வொரு நாளும் உள்ள நிலைமையை எடுத்துச்சொல்லி வருகிறோம். முதல்வரின் வழிகாட்டுதல்படி நாங்கள் நடப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கலெக்டர் பிரதீப் குமாரும் உடன் இருந்தார்.