பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனர், கல்வி அதிகாரிகள், தேர்வுத்துறை இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வரும் கல்வி ஆண்டுக்காக தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளில் எத்தனை மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டார். அப்போது அதிகாரிகள் தரப்பில் மாவட்டம் வாரியாக தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி வகுப்புகளில் சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகளின் பட்டியலை வழங்கினர்.
ஒட்டுமொத்தமாக அனைத்து வகுப்புகளிலும் சேர்த்து தமிழகத்தில் 3 லட்சத்து 24 ஆயிரத்து884 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை தெரிவித்தனர். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் மிகவும் அதிகம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் 10ம் வகுப்பு ரிசல்ட் ஏற்கனவே முடிவு செய்தபடி மே 10ம் தேதி வெளியிட நடந்து வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். அதற்கு அதிகாரிகள் திட்டமிட்டபடி ரிசல்ட் வெளியிட ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறினர்.
தற்போது வெப்ப அலை வீசி வருகிறது, இந்த நிலை ஜூன் முதல்வாரம் வரை நீடித்தால் தொடக்கப்பள்ளிகள் திறப்பது குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். எனவே மே இறுதி வாரத்தில் நிலைமையை கண்காணித்து பள்ளிகள் திறப்பதை முடிவு செய்யலாம் என்றும் வருகிற கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வித்துறையில் அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அமைச்சர் ஆய்வு நடத்தினார்.