பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தினை திருச்சி பீம நகரில் உள்ள புதிய நியாய விலை கடையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கி தொடங்கி வைத்தார்..
தொடர்ந்து சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் மகளிருக்கான உதவி எண் மற்றும் குழந்தைகள் திருமணத்தை தடை செய்தல் தொடர்பான விழிப்புணர்வு போஸ்டரை வெளியிட்டார்.
பின்னர் அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடுமையான நிதி நெருக்கடி இருக்கும் சூழலில் கூட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக முதல்வர் ஆயிரம் ரூபாய் வழங்கியிருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது
ஏழை மக்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகம் முதல்வர் இருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி..
எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் அதற்கு மத்தியில் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கிய முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவிக்கிறார்கள்.
சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் மட்டும் மழையினால் தண்ணீர் தேங்கி இருப்பதாக சொன்னார்கள் மற்றபடி வேறு எங்கேயும் தண்ணீர் நிற்கவில்லை..
நகராட்சி துறையின் சார்பில் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
மக்களுக்கு எந்தவித சிரமமின்றி இருக்க தேவையான செலவுகளை செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார் அதனை எங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இணைந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.