Skip to content

கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா.. அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

  • by Authour

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருந்ததாகக் கூறி 104 இந்தியர்களை அந்நாட்டு அரசு தனது ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நேற்று திருப்பி அனுப்பியது. கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் அழைத்து வரப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி கோரியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளிலும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தத்தை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். அப்போது அவர், “சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல. 2009-ம் ஆண்டு முதல் பலர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தும் செயல்முறையும் புதிதல்ல. அது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது ஒரு நாட்டுக்கு மட்டும் பொருந்தக்கூடிய கொள்கையும் அல்ல. பிப்ரவரி 5, 2025 அன்று இந்தியா வந்து சேர்ந்த இந்தியர்கள் விஷயத்திலும் கடந்த கால நடைமுறைகளே பின்பற்றப்பட்டன. அதில் எந்த மாற்றமும் இல்லை. அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தால் (Immigration and Customs Enforcement) ஒழுங்கமைக்கப்பட்டு, நாடு கடத்தல்கள் செயல்படுத்தப்படுகின்றன. விமானம் மூலம் நாடுகடத்தப்படுவதற்கான விதிமுறைகள் 2012 முதல் அமலில் உள்ள எஸ்ஓபி (standard operating procedure)-யை அடிப்படையாகக் கொண்டவை. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. உணவு மற்றும் பிற தேவைகள், சாத்தியமான மருத்துவ அவசரநிலைகள் உட்பட விமான பயணத்தின்போது நாடு கடத்தப்படுபவர்களின் தேவைகள் கவனிக்கப்படுகின்றன. கழிப்பறை இடைவேளையின் போது, தேவைப்பட்டால் தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இது சிவிலியன் விமானங்களுக்கும் ராணுவ விமானங்களுக்கும் பொருந்தும். விமானப் பயணத்தின்போது நாடு திரும்பும் நாடுகடத்தப்பட்டவர்கள் எந்த வகையிலும் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்படுகிறோம். அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டினர், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக வசிப்பது கண்டறியப்பட்டால் அவர்களைத் திரும்ப அழைத்துச் செல்வது கடமையாகும். சட்டப்பூர்வ நடமாட்டத்தை ஊக்குவிப்பதும், சட்டவிரோத நடமாட்டத்தைத் தடுப்பதும் நமது கூட்டு நலனில் அடங்கும். சட்டவிரோத குடியேறிகள் மீது வலுவான நடவடிக்கை எடுப்பதில் நமது கவனம் இருக்க வேண்டும்” என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.

error: Content is protected !!