விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.எம். மொக்தியார் அலி (அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன்)அப்பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்குப்பதிலாக ரோமியன்,விழுப்புரம் வடக்குமாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
இந்த தகவலை திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளரும் தொழில் துறை அமைச்சருமான டிஆர்பி ராஜா அறிவித்து உள்ளார்.
இதுபோல செஞ்சி மஸ்தானுடைய மருமகன் ரிஸ்வானும் திமுகவில் வகித்து வந்த விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதிமாறன் எம்.பி. இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஏற்கனவே செஞ்சி பேரூர்க் கழக செயலாளராக இருந்த அமைச்சர் மஸ்தானின் சகோதரர் காஜா நசீர், அந்த பொறுப்பிலிருந்து மே மாதம் நீக்கப்பட்டார்.
தற்போது அமைச்சர் செஞ்சி மஸ்தானுடைய மகன் மொக்தியார் அலி, மருமகன் ரிஸ்வான் ஆகியோர் திமுகவில் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இடையே தகராறு, உறவினர்களுக்கே முக்கியத்தும் உள்ளிட்ட புகார்களினால் கட்சி மேலிடம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மத்தியில் கூறப்படுகிறது.
ஏற்கனவே அமைச்சர் ஆவடி நாசரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முன் அவரது மகனின் பதவி பறிக்கப்பட்டது. இப்போது செஞ்சி மஸ்தானின் மகன், மருமகன், மற்றும் சகோதரர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.