Skip to content
Home » உறுப்பு தானம் …. அரசு மரியாதை…. தேம்பி அழுத அமைச்சர்… துக்க வீட்டில் நெகிழ்ச்சி

உறுப்பு தானம் …. அரசு மரியாதை…. தேம்பி அழுத அமைச்சர்… துக்க வீட்டில் நெகிழ்ச்சி

  • by Senthil

உடல் உறுப்பு தானம் செய்த சிறுவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சர் காந்தி, சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுததோடு, சிறுவனின் பெற்றோர் காலில் விழ முயன்ற சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.

தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்து இறந்தவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதையடுத்து பல்வேறு இடங்களில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் உடல்களுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அரசு சார்பில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த அருள்-பரிமளா தம்பதியின் இரண்டாவது மகன்  13 வயதான ராகவேந்திரா கடந்த 18ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.

ராகவேந்திரா உடலுக்கு அஞ்சலி செலுத்தும் அமைச்சர் காந்தி.
இதில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மருத்துவமனையில் மூளை சாவடைந்தார். இதையடுத்து தீராத சோகத்திலும் ராகவேந்திராவின் பெற்றோர் தாமாகவே முன்வந்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க ஒப்புதல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து ராகவேந்திராவின் உடல் இன்று நல்லடக்கம் செய்வதற்காக சர்வந்தாங்கல் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

ராகவேந்திராவின் பெற்றோரிடம் கண்ணீர் மல்க ஆறுதல் கூறிய அமைச்சர் காந்தி
உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை அடுத்து அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் வளர்மதி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

மேலும் உடல் உறுப்பு தானம் செய்த ராகவேந்திராவின் பெற்றோர்களிடம் அமைச்சர் ஆர்.காந்தி ஆறுதல் தெரிவித்ததோடு , இறந்த வாலிபரின் தாயாரை கரங்களை தொட்டு  வணங்கி, இரு கரம் கூப்பி கண்ணீர் விட்டு தேம்பி அழுதார். இதைப்பார்த்த  பெற்றோரும் கண்ணீர்விட்டு அமைச்சரை  தேற்றினர்.  இதனால் துக்க வீட்டில்  மேலும் சோகமும், துக்கமும் அதிகரித்தது.

மகன் இறந்தாலும் அவனால் மற்றவர்கள் நன்றாக இருப்பார்கள் என்று தான் உடல் உறுப்பு தானம் செய்தோம்’ என கண்ணீருடன் பெற்றோர் கூறியதையடுத்து, சட்டென அமைச்சர் காந்தி  பெற்றோரின் காலில் விழ முயன்றதோடு, ’காலை தொட்டு கும்பிடுகிறேன்’ அம்மா என்று கண்ணீர் மல்க பேசினார். அமைச்சரின் இந்த செயலால் அங்கிருந்து அனைவரும்  கண்ணீரும், கம்பலையுமாகி நெகிழ்ச்சியடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!