அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்து 17 மணி நேரம் தங்கள் கஸ்டடியில் வைத்து டார்ச்சர் செய்தனர். யாரையும் அனுமதிக்கவில்லை. அமைச்சர் கைது செய்யப்பட்டது குறித்து உற்வினர்களுக்கும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று காலை நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மேகலா சார்பில் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
கைது செய்யப்படும்போது பின்பற்றப்படவேண்டிய விதிகள் பின்பற்றப்படவில்லை. அமைச்சர் இப்போது நீதிமன்ற காவலில் உள்ளார். எனவே இந்த மனு செல்லத்தக்கது அல்ல என்று சொல்லலாம். ரிமாண்ட் சட்டவிரோதமாக இருந்தால் அல்லது இயந்திரத்தனமாக இருந்தால், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. கைது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்காததால் இது சட்டவிரோதமான கைது ,அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்றி, நீதிமன்ற காவலிலேயே அவருக்கு சர்ஜரி செய்ய வேண்டும்.(இதற்காக ஓமந்தூரார் மருத்துவமனை வழங்கிய அறிக்கையையும் தாக்கல் செய்தனர். )
இவ்வாறு வாதிட்டார்.
அதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவு சரியானதா, இல்லையா என உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது. ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. எந்தவிதமான இடைக்கால உத்தரவையும் கோர முடியாது. ஓமந்தூரார் மருத்துவமனை அறிக்கையை நாங்கள் ஏற்கமாட்டோம். எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கை தரவேண்டும்.
இவ்வாறு வாதங்கள் நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஒருமணி நேரத்தில் உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து மாலை 4.50 மணிக்கு நீதிபதிகள் அளித்த உத்தரவில் கூறியதாவது: காவேரி ஆஸ்பத்திரியில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆபரேசன் செய்யலாம். இதற்காக அவரை காவேரி ஆஸ்பத்திரிக்கு மாற்றலாம். அமலாக்கத்துறை நியமிக்கும் மருத்துவர்கள் சிகிச்சையை ஆராயலாம். நீதிமன்ற காவலில் அமைச்சர் நீடிக்க வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரையை சந்தேகிக்க இயலாது.
இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் கூறி உள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.