அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் தனியார் மண்டபத்தில் பள்ளிக்கல்வித் துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது,… அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் 07.12.2022, 08.12.2022 மற்றும் 12.12.2022 ஆகிய நாட்களில் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரியில் 6 முதல் 8ஆம் வகுப்பு, 9 முதல் 10ஆம் வகுப்பு, 11 முதல் 12ஆம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு முறையே மூன்று நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
மேலும், மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலையரசன், கலையரசி என்ற பட்டங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலாவாக வெளிநாடு செல்ல வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இதுபோன்ற திறன் போட்டிகளில் தவறாமல் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் தங்களுக்கு ஏற்படும் தயக்க உணர்வை போக்க முடியும். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத்தலைவர் இ.அபிநயா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.