சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன் வழங்க கோரி கடந்த ஏப்ரல் 1ம் தேதி செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சுமார் 4 மாதகாலாக நடைபெற்று வரும் ஜாமீன் மனு மீதான விசாரணையின் இறுதி வாதம் கடந்த ஆக 12ம் தேதி நடைபெற்றது. தீர்ப்புக்காக வழக்கின் தேதி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் கடந்த 14ம் தேதி அமலாக்கத்துறையினரிடம் உச்சநீதிமன்றம் ஒரு விளக்கம் கேட்டது. அந்த விளக்கத்திற்கு பதில் அளிக்க தனது தரப்பு ஆட்கள் இல்லை எனவும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வழக்கு விசாரணையை 20ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது. இன்று காலை விசாரணை வந்த போது அமலாக்கத்துறையினர் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா வர வாய்ப்பு இல்லை எனவும் எனவே கால அவகாசம் வேண்டும் எனவும் அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து கோபம் அடைந்த நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா மற்றும் ஜார்ஜ் மாலி ஆகியோர் இன்றைய தினம் தான் இறுதி நாள் என்றும் இனி அமலாக்கத்துறைக்கு கால அவகாசம் கொடுக்க முடியாது என எச்சரித்தனர். இதனால் முன்னாள் அமைச்சர செந்தில்பாலாஜியின் ஜாமீ்ன் மனு மீது இன்று உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் என்பதால் செந்தில்பாலாஜி தரப்பினர் உற்சாகமடைந்துள்ளனர்..