Skip to content

தமிழர்களின் உரிமையை பாதுகாப்பது தான் திராவிட மாடல்…

கரூரை அடுத்த வெண்ணைமலையில் அமைந்துள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வருவாய் துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தாட்கோ, தொழில் வணிகத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய பல்வேறு துறைகள் சார்பாக ரூபாய் 6 கோடியே 75 லட்சம் மதிப்பில் 1237 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி மற்றும் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.  விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில்
தமிழகத்தில் உள்ள அமைச்சர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக செயல்பட்டு வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த முறை கரூர் வந்த போது 1 லட்சத்து 22 ஆயிரத்து 19 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார். இதுவரை இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் 2 லட்சத்து 2000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கரூரை பெருமைமிகு மாவட்டமாக மாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, கரூர் மாவட்ட மக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

கரூர் மாவட்டத்திலுள்ள தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் பணி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் 38 மாவட்டங்களில் முதன்மை மாவட்டமாக இந்த திட்டம் விரைவில் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும். ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைக்கக்கூடிய முதல்வராக தமிழக முதல்வர் உள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின்போது சில முரண்பாடுகள் ஏற்பட்டன. அந்த முரண்பாடுகளை நொடிப்பொழுதில் தடுத்து நிறுத்தியவர் தமிழக முதல்வர். தமிழக மக்களுக்கு இழுக்கு என்று ஒன்று வந்தால் தன்மானத்தோடு தமிழர்கள் உரிமையை பாதுகாக்கும் முதல்வராக திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருபவர் நமது முதல்வர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!