பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையால் விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. சில இடங்களில் மரங்கள் விழுந்தும் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் பாதிப்பு மற்றும் நிவாரணப்பகுதிகளை கவனிக்க கடந்த 3 நாட்களாக தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விழுப்புரத்தில் முகாமிட்டுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளையும் அவர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தினமும் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் மின் வினியோகம் மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்கொண்டு வருகிறார். அந்த கூட்டத்தில் மின் வினியோகம் தொடர்பான ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.. இதன் ஒரு பகுதியாக மின் வினியோகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட மின் வாரிய அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு.க.நந்தகுமார், இயக்குனர் (பகிர்மானம்) அ.ரா.மாஸ்கர்னஸ், மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.