கடந்த டிசம்பர் 10ம் தேதி திருச்சியில் பாஜ இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் பங்கேற்றனர். இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானத்தில் அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா ஆகியோர் சென்றனர். சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் ஏறிய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா இருவரில் விமானம் புறப்படும் நேரத்தில் அவசர கால(ஏமர்ஜென்சி) கதவிற்கான பட்டனை அழுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அவசர கால கதவு திடீரென திறந்து உள்ளது. இதனால், விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகளை இறக்கி விட்டு பின்னர் சோதனைகள் நடத்தி சுமார் 2 மணி நேரம் கழித்து விமானம் திருச்சி புறப்பட்டு சென்றது. மேலும் தவறுதலாக நடந்துவிட்டதாக மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்தால் தான் விமானத்தில் பயணம் செய்ய முடியும் என அதிகாரிகள் கூறியதால் அண்ணாமலை, மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து கடந்த 29ம் தேதி தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தான் தனது டிவிட்டர் பக்கத்தில் விமானத்தின் கதவை திறந்த போட்டோஷாப் கட்சி நிர்வாகிகள் என கலாய்த்து தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தார். இது குறித்து பாஜ தரப்பில் யாரும் பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் 39 நாட்களுக்கு பிறகு, இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) தெரிவித்துள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் படும்
என்று டிஜிசிஏ வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானநிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், சென்னை- திருச்சி விமானத்தின் அவசர கால கதவை பயணி ஒருவர் கடந்த டிசம்பர் 10ம் தேதி தவறுதலாக திறந்துவிட்டார். தன்னுடைய செயலுக்கு உடனடியாக, அந்த பயணி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். உரிய சோதனைகளுக்கு பிறகு விமானம் திருச்சி புறப்பட்டது. இதனால் பாதுகாப்பு குறைபாடு எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ரபேல் வாட்ச் விவகாரத்தில் பில் எங்கே? என அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டிருந்த நிலையில் ஏப்ரல் மாதம் பில்லை காட்டுகிறேன் என பாஜ தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அடுத்ததாக விமானத்தின் கதவை திறந்தது யார்? என்பது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட டிவிட்டருக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அடுத்தடுத்து சர்ச்சைகளால் அண்ணாமலையின் தலைவர் பதவிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
