கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் உள்ள குளத்தில் 23 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து வராத நிலையில் இந்த ஆண்டு குடகுனாறு அணை தூர்வாரப்பட்டு அங்கிருந்து வரும் உபரி நீர் வெள்ளியணை குளத்திற்கு வாய்க்கால்கள் மூலம் கொண்டுவரப்பட்டு சமீபத்தில் நிரம்பியது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்திலிருந்து வெள்ளியணை, உப்பிடமங்கலம், குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்று இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் விவசாய பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தனர். இதனால் சுமார் 330 ஏக்கர் அளவிற்கு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். வெள்ளியணை ஏரி மழையால் நிரம்பி வந்த நிலையில், முதல் முறையாக குடகனாற்றில் இருந்து வாய்க்கால் வழியாக நீர் நிரம்பியது இதுதான் முதன்முறை. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சி்கு பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது.. தாதம்பாளையம், பஞ்சப்பட்டி, உள்ளிட்ட ஏரிகளையும் சேர்த்து முக்கியமான பெரிய ஏரிகளுக்கு உபரி நீர் கொண்டு சேர்க்கும் திட்டங்களுக்கான மதிப்பீடு தயாரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. தாதம்பாளையம் ஏரிக்கு 15 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்வர் உத்தரவு வழங்கியுள்ளார். தாதம்பாளையம் ஏரி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் மாவட்ட கலெக்டர் மூலமாக கருத்துரு அனுப்பி அந்த இடத்திற்கு பதிலாக வனத்துறைக்கு வேறு இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தினை முழுவதுமாக பொதுப்பணித்துறையினர் உடைய கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டு முதல் கட்டமாக 15 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வதற்காக முதல்வர் ஒதுக்கி உள்ளார். வெள்ளியணை மற்றும் பஞ்சப்பட்டி ஏரிகளுக்கு கூடுதல் நிதிகளை பெறுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளியணை ஏரியை முழுமையாக சுத்தம் செய்த பிறகு நான்கு புறமும் கரைகள் அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.