தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பாலாஜி நகர் வழியாக மருத்துவகல்லூரிக்கு ஒரு தனியார் மினி பேருந்து சென்றது. பாலாஜி நகரில் உள்ள டிவிஎஸ் ஷோரூம் அருகே மினி பேருந்தை ஓட்டுநர் செந்தில் தாறுமாறாக ஓட்டியதாக தெரிகிறது. திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலையின் ஓரம் கடைகள் முன் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 சக்கர வாகனங்கள் மீது அப்படியே மோதி தள்ளியபடி சென்றது. சீட்டு கட்டுகள் சரிந்தது போல வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று விழுந்து நசுங்கியது. இப்படியாக 15க்கும்மேற்பட்ட டூ வீலர்கள், 2 கார்கள் மீது பஸ் மோதி தள்ளியது.இதைப்பார்த்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
ரோட்டு ஓரம் நின்று இந்த விபத்தை பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவன் ஒரு பெண் ஆகிய இருவரும் இந்த விபத்தில் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் தஞ்சை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஒரு மின் கம்பத்திலும் பஸ் மோதியதில் மின் கம்பம் முற்றிலும் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவல் துறையினர் விபத்து ஏற்படுத்திய மினி பேருந்து மற்றும் சேதம் அடைந்த வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்து சென்றனர். பின்பு மின்துறை ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்களும் நேரடியாக வந்து அந்த பாதிப்பை சரிசெய்தனர். இந்த விபத்து குறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த சாலையானது போக்குவரத்து நிறைந், குறுகிய சாலையாக உள்ளது. அதில் கடைகாரர்கள் சாலைகளில் கடைகளின் விளப்பர பலகைகளும் வைத்துள்ளனர். இதை அறிந்த தஞ்சாவூர் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகர் அங்கு ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அகற்றியதோடு அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.