புதுகை மாவட்டம் துளையானூரில் உள்ள ஒரு குவாரியின் அதிபர்கள் ராசு, ராமையா. இவர்களது குவாரியில் விதிகளை மீறி கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதாf அதிமுக முன்னாள் கவுன்சிலரும், சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி அதிகாரிகளிடம் புகார் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 17ம் தேதி ஜெகபர் அலி துளையானூர் அருகே உள்ள வெங்களூரில் லாரி ஏற்றி கொல்லப்பட்டார். இது தொடர்பாக திருமயம் போலீசார் முதலில் விபத்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அது கொலை வழக்காக மாற்றப்பட்டு, குவாரி அதிபர் ராசு, அவரது மகன் தினேஷ், லாரி டிரைவர்கள் காசிநாதன், முருகானந்தம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்னொரு பங்குதாரரான ராமையா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த குவாரியில் நடந்த முறைகேடுகள் குறித்து கனிம வள அதிகாரிள் 2 நாட்களாக குவாரியில் ஆய்வு நடத்தினர். அதைத்தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி போலீசார் ராமையாவை தேடி வந்த நிலையில் ராமையா இன்று மதியம் நமணசமுத்திரம் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கிறார்கள்.