தஞ்சை , கும்பகோணம் ஆழ்வான் கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் சதீஷ் ( 46). இவரது வீட்டின் கீழ் தளத்தில் டீத்தூள் குடோன் வைத்து நடத்தி வருகிறார். மேல் தளத்தில் உள்ள வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கார் மற்றும் பேட்டரியில் இயங்கும் 2 எலக்ட்ரிக் பைக்குகளை தனது வீட்டு வாசல் அருகே உள்ள வராண்டா பகுதியில் நிறுத்தி வைப்பது வழக்கம். வழக்கம்போல் தனது எலக்ட்ரிக் பைக்குகளை வராண்டா பகுதியில் நிறுத்திவிட்டு பேட்டரிக்கு சார்ஜ் போட்டுவிட்டு மாடிக்கு சென்று தூங்கியுள்ளார். இந்த நிலையில் சதீஷ் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த எலக்ட்ரிக் பைக்கில் இருந்து கரும்புகை வெளியானது. இதனைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக சதீஷ்க்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சதீஷ் மற்றும் அவரது தாயார் அன்னபூரணி மகன் தனுஷ் உறவினர் கணேசன் ஆகியோர் எழுந்து கீழே இறங்கி வருவதற்குள் அந்த கட்டிடம் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்து திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் வீட்டு மாடியில் இருந்தவர்கள் கீழே இறங்கி வர முடியாமல் தவித்தனர். மேலும் அதிகமாக வெளியேறிய புகை
மூட்டத்தால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கும்பகோணம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த கட்டிடத்திற்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து விட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தி ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தவுடன் மாடியில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தவர்களை மீட்டு கீழே கொண்டுவந்து அவர்களை சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தீ விபத்தில் கீழே குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டீ தூள் பாக்கெட்டுகள் மற்றும் 2 எலக்ட்ரிக் பைக்குகள் ஒரு கார் உள்ளிட்ட ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.