தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலம் ஏராளமானோர் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இதற்கிடையே, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 2,811 மின் வாரிய அலுவலகங்களில் கடந்த மாதம் 28-ம் தேதி முதல் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் இந்த அரசாணையை ரத்துசெய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடக் கோரிய வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வற்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதில், அடிப்படை ஆதாரமற்ற முறையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறிய சென்னை உயர் நீதிமன்றம், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.