அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான முகாம் பெரம்பலூர் எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் இன்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் கற்பகம் இதனை தொடங்கி வைத்தார். வரும் 5ம் தேதி வரை இந்த முகாம் நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள 16 மாவட்டங்களை சேர்ந்த 3500 நபர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.முதல் நாளான இன்று நடந்த ஆள்சேர்ப்பு முகாமில் 700 பேர் கலந்து கொள்வதற்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்.
இரண்டு மாதங்களுக்கு முன் ஆன்லைனில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற திருச்சி, கரூர், பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்காக மட்டுமே நடத்தப்படுகின்றது.
இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு 1600 மீட்டர் ஓட்டம் மற்றும் உடல் தகுதிகள், சான்றிதழ்கள், சோதனை செய்யப்பட்டது. ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொண்ட ஏராளமான இளைஞர்கள் 1600 மீட்டர் தூரத்தை ஓட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த முகாமில் திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு பணி அலுவலர் கர்னல் தீபாகுமார், மருத்துவ அலுவலர் டாக்டர் முதித்துப் ரெட்டி, மேஜர் நீலம் குமார்
ஆகியோர் கலந்து கொண்டனர்.