தமிழ்நாட்டில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் மிக மோசமான மழை கொட்டி தீர்த்தது. டிசம்பர் தொடக்கத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக மோசமான மழை கொட்டி தீர்த்தது.
அதே டிசம்பரில் மாத இறுதியில் தென்தமிழகத்திலும் மழை கொட்டியது. அப்போது தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.
இந்த வெள்ள பாதிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி
வந்தது. இதற்கிடையே இப்போது மிக்ஜாம் மற்றும் இந்த வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்குத் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மிக்ஜம் புயல் பாதிப்புகளுக்காகத் தமிழகத்திற்கு ரூ.285 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல தமிழகத்தில் 2023 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
அதில் முதற்கட்டமாக மிக்ஜாம் நிதியில் 115 கோடி ரூபாயும், வெள்ள பாதிப்பு நிதியில் இருந்து 160 கோடி ரூபாயும் முதற்கட்டமாக இப்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மிக்ஜாம் புயல் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது..