கடந்த ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பேரழிவுக்கு ஆளானது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்தது. இந்த நிவாரண உதவி ரொக்கமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ள நிவாரண நிதியை ரொக்கமாக வழங்கினால் முறைகேடு நடைபெறும் என்றும், அதனை பொதுமக்களின் வங்கிக் கணக்கு மூலமாக செலுத்த வேண்டும் என வலியுறுத்தியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. நிலுவையில் இருந்த இந்த வழக்குகள் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில், நீதிமன்றத்தில், மிக்ஜாம் புயல் நிவாரணம் தொடர்பாக ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மேற்கண்ட 4 மாவட்டங்களில் 24 லட்சத்து 26 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் என ரூ.1455 கோடியே 20 லட்சம் கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வெள்ள நிவாரண உதவி தேவை என பெறப்பட்ட சுமார் 6 லட்சம் மனுக்களை பரிசீலித்து அவற்றில் 10 சதவீதம் என சுமார் 53 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.31 கோடியே 73 லட்சம் ரூபாய் என மொத்தம் 1,487 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி, இந்த வழக்கு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.