’மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சின்னத்திரை நடிகர்கள் பாலா மற்றும் அமுதவாணன் தலா ஆயிரம் ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு வழங்கியுள்ளனர். அவர்களின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
’மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மூன்று நாட்களாகியும் வடியவில்லை. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வர முடியாமலும் உணவு உள்ளிட்டவை கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான பால், உணவு உள்ளிட்ட பொருட்களை கொடுப்பதற்கும் தன்னார்வலர்கள் பலரும் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், சின்னத்திரை நடிகர்கள் பாலா மற்றும் அமுதவாணன் ஆகியோர் சென்னையை அடுத்த பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு மொத்தம் 2,00,000 ரூபாயை நேரில் வழங்கினர். நடிகர் பாலா மற்றும் அமுதவாணனின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், பொதுமக்கள் அவர்களை வெகுவாக பாராட்டியுள்ளனர்.