வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது.. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 290 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுபெறக்கூடும்.இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (டிச.4) மாலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், வடதமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொள்ளக்கூடும். அதன்பின்னர், இது வடக்கு திசையில், தெற்கு ஆந்திர கடற்கரைக்கு இணையாக நகர்ந்து டிச.5-ம் தேதி காலை, நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று, சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். நாளை (டிச.4), திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். நாளை (டிச.4), திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 80 கி.மீ வேகத்திலும் பலத்த காற்றானது வீசக்கூடும். விழுப்புரம், புதுச்சேரி மற்றும் கடலூரில், மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் பலத்த காற்றானது வீசக்கூடும். இவ்வாறு பாலசந்திரன் கூறினார். இந்த நிலையில் எனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து நாளை இந்த நான்கு மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றாலும், அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.