மேற்கு மெக்சிகோவில் அதிகாலையில் பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த பேருந்து அமெரிக்க எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்குச் சென்ன்றுகொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது, சாலை வளைவில் பேருந்து வேகமாக சென்று திரும்பியதால் பள்ளத்தாக்கில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் இந்தியா, டொமினிகன் குடியரசு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 40 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.
மேலும், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும், விபத்தில் காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து கூறிய பாதுகாப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு செயலாளர் ஜார்ஜ் பெனிட்டோ ரோட்ரிக்ஸ், பர்ரான்கா பிளாங்கா அருகே இந்த சோகமான விபத்து ஏற்பட்டது. பள்ளத்தாக்கின் ஆழம் காரணமாக மீட்பு முயற்சிகள் மிகவும் சவாலானதாக இருந்தது என்று கூறினார். இதற்கிடையில், கடந்த மாதம் தெற்கு மாநிலமான ஓக்ஸாகாவில் மற்றொரு பேருந்து விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.