சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர், அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதியான இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்துவைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் செய்துள்ளனர். மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 865 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 727 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் 103.48 அடியில் இருந்து 103.41 அடியாக குறைந்துள்ளது.