மேட்டூர் அணை கடந்த 30ம் தேதி மாலை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. கடந்த 2ம் தேதி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 71 ஆயிரம் கனஅடியாக இருந்தது. அதன் பிறகு நீர்வரத்து குறையத் தொடங்கியது.
ஆனாலும் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு குறையாமல் பராமரித்து வருகிறார்கள். இன்று காலை அணைக்கு நீர்வரத்து 50,263 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 51,303 கனஅடி வெளியேற்றப்படுகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு பகல் 12 மணிக்கு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. எனவே நீர் திறப்பும் அதற்கேற்றாற்போல் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக 16 கண் மதகு வழியாக நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
நாளை காலை நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக குறையலாம் என்பதால் அதற்கு ஏற்ப நீர் திறப்பும் குறைக்கப்படும். டெல்டாவுக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 10 ஆயிரம் கனஅடிக்கு குறைக்க வாய்ப்பில்லை என்பதால் நீர் வரத்து 10 ஆயிரம் கனஅடிக்கு குறையும்போது அணையின் நீர் இருப்பும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இன்று வரை 8 நாட்களாக அணையின் நீர்மட்டம் 120 அடியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.