காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். அணை திறக்கப்பட வேண்டுமானால் அணையில், 90 அடிக்கு மேல் தண்ணீர் இருக்க வேண்டும். அணைக்கு நீர் வரத்து கணிசமாக இருக்க வேண்டும். அத்துடன் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்க வேண்டும்.
மேற்கண்ட அம்சங்களைக்கொண்டு அணை திறக்கப்படுவது வழக்கம். இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையில் 107.76 அடி தண்ணீர் உள்ளது. ஆனால் நீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. ஆனாலும் பருவமழை உரிய நேரத்தில் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் அணை ஜூன் 12ல் வழக்கம் போல பாசனத்திற்கு திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். அணை ஜூன் 12ல் திறக்கப்பட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும். தொடர்ந்து நீல்வரத்து, இருப்பு திருப்திகரமாக இருந்தால், குறுவையை தொடர்ந்து தாளடி, சம்பா சாகுபடியும் நடைபெறும். 3 போகமும் நடைபெற்றால் சுமார் 16 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெறும்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 107.76 அடி. அணைக்கு வினாடிக்கு 1872 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 1003 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 75.264 டிஎம்சி.