காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. ஒருபோக சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்கலாம் என தஞூசை வேளாண் வல்லுனர்கள் குழு அறிக்கை வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது கர்நாடகத்தில் பலத்த மழை கொட்டுவதால் அங்குள்ள கபினி அணி நிரம்பி வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் கே. ஆர்.எஸ் அணை நிரம்பவில்லை. அது ஒரு வாரத்தில் நிரம்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம்.
எனவே இந்த மாத இறுதிக்குள் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா காவிரி பாயும் மாவட்டங்களில் விமரிசையாக கொண்டாடப்படும். எனவே காவிரியில் மக்கள் நீராட வசதியாக இந்த மாத இறுதியில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.