தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் கொட்டி தீர்க்கிறது. இன்று கர்நாடகத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து கர்நாடகத்தில் மழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி அணை ஏற்கனவே நிரம்பி விட்டது. அஅந்த அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டே இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி கபினியில் இருந்து வினாடிக்கு 50ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூருக்கு தண்ணீர் தரும் இன்னொரு அணையான கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. அந்த அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இது தவிர நுகு அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டுள்ளதால் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 55,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
அதே நேரத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 24ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 50.03 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,003 கனஅடி திறக்கப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 17.830 டிஎம்சி. நேற்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 46.80 அடியாக இருந்தது. இன்று காலை 50.03 அடி ஆனாது. ஒரே நாளில் 3.23 அடி உயர்ந்து உள்ளது.