கேரளா, கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பால், நீர்வரத்து அதிகரித்து, மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 27-ம் தேதி 100 அடியை எட்டியது. தொடர்ந்து, அணைக்கான நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டார்.
அதன் பிறகும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் 30 ம் தேதி இரவு 16 கண் மதகு வழியாக உபரி நீர்வெளியேற்றப்பட்டது. அணைக்கு நீர் வரத்து சரிந்ததால் நேற்று முதல் 16 கண் மதகு வழியாக நீர் திறப்பது நிறுத்தப்பட்டது. பின்னர், டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நேற்று 21,500 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.
இன்று காலை 8 மணிக்கு மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக இருந்ததுஐ. அணைக்கு வினாடிக்கு 11,196 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10,384 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கு நீர் தேவை அதிகரித்தன் காரணமாக, நீர் திறப்பு இன்று காலை 9 மணி முதல் விநாடிக்கு 10,000 கன அடியில் இருந்து 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
அதே நேரத்தில் இன்று காலை நீர் வரத்து 6,367 கனஅடியாக சரிந்தது. எனவே இன்று காலை 9 மணிக்கு அணையின் நீர்மட்டம் 119.54 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியில் இருந்து , 92.74 டிஎம்சியாக சரிந்துள்ளது. கடந்த 9 நாட்களுக்கு பிறகு, அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் சரிந்துள்ளது.