பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும் ஒருவாரமாக மழை பெய்ததால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென அதிகரித்து வருகிறது.
இன்று காலை 8 மணி அளவில் மேட்டுர் அணையின நீர்மட்டம் 113.21 அடி. அணைக்கு வினாடிக்கு 32,240 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,003 கனஅடி மட்டுமே திறக்கப்படுகிறது. அதே நேரத்தில் காவிரியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 10,817 கனஅடி தண்ணீர் வருகிறது. கொல்லிமலையில் பெய்த மழை நீர் முக்கொம்பு அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது.
மேட்டூர் அணையில் தற்போது 83.054 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அணை நிரம்ப இன்னும் 10 டிஎம்சி தண்ணீர் தான் தேவைப்படுகிறது.
இன்று காலை 8 மணி நிலவரம்போல 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் இன்னும் 4 நாட்களுக்கு வந்தால் மேட்டூர் அணை தனது முழு உயரமான 120 அடியை எட்டிவிடும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.