தமிழ்நாட்டுக்கு காவிரியில் தினமும் 8,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா முடிவு செய்துள்ளதாக கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 20 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. இதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், இந்த மாத இறுதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று அறிவித்தது. என்றாலும், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருப்பது குறித்து ஆலோசிப்பதற்காக பெங்களூருவில் ேநற்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவிரிக்கு நீர் தரும் 4 அணைகளின் நிலவரங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.
இந்த நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு 11, 500 கனஅடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட முடியாது என்றும், 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுமென்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு ஒருபோதும் தமிழகத்திற்கு தண்ணீர் தராது. இந்த நிலையில் வருணபகவானே கருணை கூர்ந்து கேரளா, கர்நாடகத்தில் மழையாக கொட்டியதால் கபினி அணி நிரம்பி உள்ளது. அந்த அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே மேட்டூர் அணைக்கு நாளை முதல் நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளை மாலை 20 ஆயிரம் கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 43.22 அடி. அணைக்கு வினாடிக்கு 4,047 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,003 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 13.808 டிஎம்சி தண்ணீர் உள்ளது.