வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பரவலாக அதிக மழை பொழிவை கொடுத்தது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும் அதிக மழை பெய்தது. இதனால் கடந்த 20 நாட்களாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.98 அடியாக இருந்தது. அணை நிரம்ப 0. 02 அடி மட்டுமே தேவைப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 1600 கனவீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இரவு 10 மணி அளவில் அணை 120 அடியாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது. அதாவது கடந்த 2024ம் ஆண்டில் மேட்டூர் அை8ண 3வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியது.
கடந்த ஜூலை 30-ம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை 43வது முறையாக எட்டியது. பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்ட நிலையில் அணையின் நீர்மட்டம் குறைந்தது. பின்னர், நீர்வரத்து அதிகரித்ததால், ஆகஸ்ட் 12-ம் தேதி 2வது முறையாக மேட்டூர் அணை மீண்டும் 120 அடியை எட்டியது. தற்போது 3வது முறையாக நிரம்பி உள்ளது.
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இன்று காலை 8 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 120 அடி. அணையில் 93.470 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அணைக்க வினாடிக்கு 1791 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 669 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து, நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார், அணையில் ஆய்வு மேற்கொண்டார். அணையின் 16 கண் மதகு பகுதி, இடது கரை, வலது கரை, வெள்ள கட்டுப்பாட்டு மையம், சுரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். அணையில் இருந்து நீரை வெளியேற்றுவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், நீர்வளத்துறை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின் போது, சேலம் மேல் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவக்குமார், மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ், மதுசூதனன், அணை பிரிவு உதவி பொறியாளர் சதிஷ் ஆகியோர் உடனிருந்தனர்.