கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் பாய்ந்தோடி மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. காவிரி உற்பத்தியாகும் இடத்தில் இருந்து அது வங்க கடலில் சங்கமிக்கும் இடம் வரை அதன் நீளம் சுமார் 800 கி.மீ. இதில் கர்நாடகத்தில் 320 கி.மீ, தமிழகத்தில் 416 கி.மீ, இரு மாநிலங்களின் எல்லையாக 64 கி.மீ. தூரம் காவிரி நதி பாய்கிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்புபடி காவிரியில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். இந்த தண்ணீரை தமிழக அரசு மேட்டூர் அணையில் தேக்கி வைத்து தமிழகத்தின் குடிநீர் ஆதாரமாகவும், 12 மாவட்டங்களின் வேளாண்மைக்கும் பயன்படுத்தி வருகிறது. மேட்டூர் அணையால் தமிழகத்தின் தொழில் வளமும் சிறந்து விளங்குகிறது.
மேட்டூர் அணை கட்டுவதற்கு முன் காவிரி காட்டாறு போல பாய்ந்து ஓடி வருடந்தோறும் தமிழகத்தில் பெரும் சேதம் ஏற்படுத்தியது. உயிர் தேசம், பொருட்சேதம் என ஆண்டுக்கு ஆண்டு சேதம் அதிகரித்ததால், அதனை தடுக்க மேட்டூர் அணை கட்டுவது என 1925-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. அப்போதைய தலைமை வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு என்ஜினீயர் கர்னல் டபிள்யூ.எல்.எல்லீஸ், அணை நிர்வாக என்ஜினீயர் வெங்கட்ராமையா, முதன்மை தலைமை என்ஜினீயர் முல்லிங் கஸ் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாக அணை கட்டுமான பணியில் ஈடுபட்டனர்.இதற்காக தற்போதைய அணையில் இருந்த பல கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு புதிய இடங்கள் கொடுக்கப்பட்டன. அப்படி மேட்டூர் அணைக்குள் இருந்த ஒரு கிராமம் தான் சாம்பள்ளி. தற்போது அது மேட்டூர் அணையை ஒட்டி உள்ளது. அந்த கிராமத்தின் புதிய பெயர் புதுசாம்பள்ளி என அழைக்கப்படுகிறது.
மேட்டூர் அணை கட்டுவதற்காக தொழிலாளர்கள், பொறியாளர்கள் முகாமிட்டு தங்கிய இடத்திற்கு பெயர் மேட்டூர் கேம்ப் என வெள்ளைக்காரர்களால் அழைக்கப்பட்டது. இன்றும் அந்த இடம் மேட்டூர் கேம்ப் என்றே அழைக்கப்படுகிறது. இந்த இடமும் தற்போதைய மேட்டூர் அணை அருகிலேயே உள்ளது.
இவ்வாறு தொடங்கப்பட்ட அணையின் கட்டுமான பணி சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு 1934-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி நிறைவடைந்தது. இந்த அணை கட்டப்பட்டபோது அப்போதைய செலவுத்தொகை ரூ.4 கோடியே 80 லட்சம் ஆகும். இதைத்தொடர்ந்து 1934-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி, அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை மாகாண கவர்னராக இருந்த சர் ஜார்ஜ் பிரெடரிக் ஸ்டான்லி அணையை திறந்து வைத்தார். அவர் நினைவாகவே மேட்டூர் அணைக்கு ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்ற பெயரிடப்பட்டது.
மேட்டூர் அணையின் நீளம் 5,300 அடி. அணையின் நீர்த்தேக்க பகுதி 59.25 சதுர மைல். அணையின் மொத்த கொள்ளளவு 93.47டி.எம்.சி. ஆகும். (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி). அணையின் உயரம் 120 அடி . பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விடுவதற்காக அணையின் நீர்மட்ட அளவை பொறுத்து மேல்மட்ட மதகு, கீழ்மட்ட மதகு, மின் நிலை மதகு என 3 நிலை மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அணையின் இடது கரைப்பகுதியில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும் நிலையில் உபரி நீர் திறந்து விடுவதற்காக 16 கண் மதகுகள் அமைக்கபட்டுள்ளன. ஒவ்வொரு மதகும் 20 அடி உயரமும், 60 அடி நீளமும் கொண்டதாகும். இந்த அணையில் அமைக்கப்பட்டுள்ள மதகுகள் அதற்குரிய தளவாடங்கள் அனைத்தும் இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டன. மதகுகளை இயக்க 16 மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த மின்மோட்டார்கள் கைகளாலும் இயக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 4 லட்சத்து 410 கனஅடி நீரை வெளியேற்றலாம். இது தவிர அணையின் வலது கரைப்பகுதியில் மண் கரை கொண்ட வெள்ளப்போக்கி 814 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத வகையில் அணைக்கு மிக அதிகளவில் வெள்ளம் வந்தால் அணைக்கு எவ்வித சேதமும் இன்றி அதிகளவு வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் வினாடிக்கு 50 ஆயிரத்து 400 கனஅடி வரை தண்ணீரை வெளியேற்றலாம்.
அணையின் மேல் மட்ட மதகு, கீழ்மட்ட மதகு மற்றும் மின் நிலைய மதகு வழியாக வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி வரை தண்ணீரை வெளியேற்ற முடியும். மேட்டூர் அணை கட்டுமான பணி தொடங்குவதற்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை காலங்களில் வினாடிக்கு 5 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மேட்டூர் அணை கட்டுமானம் வடிவமைக்கப்பட்டபோது வினாடிக்கு 5 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
மேட்டூர் அணை கட்டப்பட்ட பிறகு 1965-ம் ஆண்டு அதிகபட்சமாக வினாடிக்கு 3 லட்சத்து 1,052 கனஅடி தண்ணீர் வந்தது. அதன்பிறகு 2019-ம் ஆண்டு வினாடிக்கு 2 லட்சத்து 53 ஆயிரத்து 730 கனஅடி தண்ணீர் வந்தது. 2005-ம் ஆண்டு அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 41 ஆயிரத்து 300 கனஅடியும், கடைசியாக கடந்த ஆண்டு(2022) அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 4 ஆயிரம் கனஅடி வரையும் தண்ணீர் வந்தது .
12 மாவட்டங்களின் வேளாண்மைக்கும், தமிழகத்தில் சென்னை உள்பட 20 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமுமாக உள்ள மேட்டூர் அணை இன்று தனது 90வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த அணை நீடூழி வாழவும், தமிழக மக்களுக்கு தொடர்ந்து தாகம் தீர்த்து, சோறு அளித்து நாடு செழிக்கவும் வாழ்த்துவோம். நடந்தாய் வாழி காவேரி.