திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகிறார். அவர் இன்று திருச்சி வந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டும் பணியை தொடங்கி விட்டார். துரை வைகோ திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:
திருச்சியில் போட்டியிட வாய்ப்பு அளித்த வைகோ அவர்களுக்கும் திமுக நிர்வாகிகள் அனைவருக்கும், கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நேரடி அரசியலுக்கு வந்த 4 ஆண்டுகளில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு உத்வேகமோ, மகிழ்ச்சியோ, வருத்தமோ கிடையாது .அதேநேரம் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களின் ஆதரவுடன் வெற்றிபெற வைத்தால் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கடமை, வேலைப்பளுவை நினைத்து பார்க்கிறேன்.
திமுக மற்றும் இந்தியா கூட்டணி ஆட்சி ஏற்றபின்னர் பெட்ரோல் ,டீசல் மற்றும் கேஸ் விலை குறைக்கப்படும் மற்றும் சிஏஏ மற்றும் பொது சிவில் சட்டம் ரத்து செய்யப்படும், இது மக்களிடையே மற்றும் தாய்மார்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தும், திமுக அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை மக்களிடம் ஒரு ஹீரோவாக பார்க்கப்படுகிறது.
ஆனால் தேர்தலுக்காக பாஜக இரண்டு ரூபாய் பெட்ரோல் ,டீசல் விலை குறைத்துள்ளது, கேஸ் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளது.
கொரோனா காலத்திற்குப் பின்னர் தமிழகம் மீண்டு வந்துள்ளது, நிதி நெருக்கடியிலும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது, புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு முடிந்தவரை செய்து வருகிறது மத்திய அரசு இப்போது நிதி அளித்து ஒத்துழைப்பு அளித்தால் கூடுதலாக பணியாற்றி இருக்க முடியும், மத்திய அரசில் மாற்றம் வந்தால் மேலும் சிறப்பான பணிகளை செய்ய முடியும்.
புதிய விமான நிலையம் திறந்து பல மாதங்கள் ஆகியும் செயல்பாட்டுக்கு வரவில்லை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டது போல திருச்சியும் விமான நிலையமும் செயல்பாட்டுக்கு வரவில்லை, ஓடுதளம் விரிவாக்கம் செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை, நகரங்களின் கட்டமைப்புகளை சீரமைக்கவும் மேம்பாலம் மற்றும் சாலைகள் அமைக்கவும் மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பேருந்து நிறுத்தத்தை விரிவாக்கம் செய்ய பல திட்டங்களை கொண்டு வர உள்ளோம், விவசாயிகள் நலனுக்காக காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தவும், பொன்மலை ரயில்வே பணிமனையில் மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணி மேற்கொள்ளவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்க பெல் நிறுவனத்தினை சிறப்பாக செயல்பட கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம். சாத்தியப்படாததை செய்வேன் என சொல்ல மாட்டேன்.
நான் எல்லா ஊருக்கும் பொதுவானவன், தமிழக மக்கள் அனைவருக்கும் கடமைப்பட்டவன் எங்களுக்கு மூன்று சீட்டு கிடைத்தால் வேறு எங்கேயாவது நிற்க வாய்ப்பு இருந்திருக்கும், ஒரு சீட்டு கிடைத்ததால் திருச்சியில் நிற்கிறேன், அமைச்சர்களைக் கொண்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை செய்வேன்.
சின்னம் தொடர்பாக வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையம் பதில் தருவார்கள் என எதிர்பார்க்கிறோம், பம்பரம் கிடைக்காவிட்டால் பொது சின்னத்தில் போட்டியிடுவோம்.
ஐடிசி விநியோகஸ்தராக 2000 முதல் 2016 வரையிலும் இருந்தேன், மதுவை எதிர்த்து போராடும் வைகோவின் மகன் எப்படி புகையிலை விற்க முடியும் என்ற அனைவரும் கேட்டதால் அதனை ராஜினாமா செய்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டது . இந்தியா முழுவதும் பாஜகவை எதிர்க்கும் இயக்கங்கள் மீது ஐடி, ஈடி சோதனை நடைபெறுகிறது. அந்த வகையில் விஜயபாஸ்கர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறலாம் .
நாட்டின் நலனுக்காக நானும் எனது தந்தையும் இழந்தது அதிகம். இந்த ஒரே விமர்சனத்திற்காக ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த நிறுவனத்தில் இருந்து நான் ராஜினாமா செய்து விட்டேன்.
இந்த விமர்சனத்தால் நானும் எனது தந்தையும் அரசியல் வாழ்வில் பல்வேறு சிரமங்களை பெற்றுள்ளோம் – தென்காசியில் 200 பேர் டீலராக இருக்கக்கூடிய இடத்தில் நானும் டீலராக இருந்தேன் .புது வாழ்வில் இருக்கும் எனக்கு இதனால் நெருடல் இருந்து கொண்டே இருந்தது இந்நிலையில் முழுவதுமாக ராஜினாமா செய்து விட்டு வந்து விட்டேன்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி என்பது தமிழகத்தில் உள்ள ஒரு தொகுதி தான் .எனக்கு அரசியல் களம் புதிது அல்ல – திருச்சி மக்களவை தொகுதி மக்கள் எனக்கு நல்ல வரவேற்பை தந்து வருகிறார்கள், திருச்சி நாடாளுமன்ற தொகுதி உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உட் கட்டமைப்பை மேம்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.