இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை தலைவர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவின் தொழில்நுட்ப திறன் வளர்ந்துள்ளதால், தானியங்கி வானிலை நிலையங்கள், செயற்கை கோள்கள், ரேடார்கள் ஆகியவற்றில் இருந்தும் வானிலை கணிப்புகளை பெற முடியும்.தற்போது, தாலுகா மட்டத்தில் வானிலை அறிக்கை வெளியிட்டு வருகிறோம். இதை விரிவுபடுத்தும்வகையில், அடுத்த வாரத்தில் இருந்து, பஞ்சாயத்து மட்டத்தில் வானிலை அறிக்கை வெளியிடப்படும்.
அதன்பிறகு, நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், ஒருவர் தங்கள் பகுதியின் வானிலை முன்னெச்சரிக்கை தகவல்களை ‘செயலி’ மூலம் அறியலாம். தங்கள் கிராமத்தின் பெயரையோ அல்லது பின்கோடு எண்ணையோ பதிவிட்டால், அந்த கிராமத்துக்கான அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னெச்சரிக்கை தகவல்கள் கிடைக்கும். அடுத்த சில மணி நேரத்துக்கான வானிலையையும் அறியலாம்.
குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம், தீவிர வானிலை முன்னெச்சரிக்கை ஆகிய தகவல்கள் அளிக்கப்படும். ஆங்கிலம், இந்தி தவிர, 12 இந்திய மொழிகளில் இத்தகவல்கள் வெளியிடப்படும். சிறு விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்காக, இம்முயற்சியை தொடங்கி இருக்கிறோம். வானிலை தகவல்களை தெரிந்துகொண்டு, அவர்கள் தங்கள் பயிர் பாதிப்பை தவிர்த்து கொள்ளலாம்.
ஒரு சிறு விவசாயி, வானிலை எச்சரிக்கைப்படி செயல்பட்டால், ரூ.12,500 வரை வீணாகாமல் சேமிக்க முடியும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 3 கோடி விவசாயிகளை எங்கள் தகவல்கள் எட்டினால், ரூ.13 ஆயிரத்து 300 கோடி சேமிக்கப்படும். பொதுமக்கள் கட்டுமான பணியையோ, திருமணங்களையோ தீர்மானிப்பதற்கு முன்பு, வானிலை தகவல்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.