திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் அப்பு (எ) ஹரிஹரன் (26) பழக்கடை நடத்தி வந்தார். கடந்த ஏப்ரல் 28 ம் தேதி இரவு நீடாமங்கலத்தை சேர்ந்த வினோத் (24) , ராஜமுருகன்(19) ஆகியோருடன் லோடு ஆட்டோவில் பழங்கள் வாங்குவதற்காக அப்பு திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது வல்லம் பைபாஸ் சாலையில் லோடு ஆட்டோவை வழிமறித்த மர்மநபர்கள் அப்புவை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். தெடர்ந்து வல்லம் டிஎஸ்பி நித்யா தலைமையில் வல்லம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தொழில் போட்டி காரணமாக நீடாமங்கலத்தை சேர்ந்த அருண் ஏற்பாட்டில் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அருணின் நண்பர்கள் 4 பேர் மற்றும் கூலிப்படையை சேர்ந்த இருவர் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
அப்பு கொலை சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படையை சேர்ந்த நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கல்குறிச்சியை சேர்ந்த அஜித் (25), தென்னரசு(23) ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அப்பு கொலை சம்பவத்திற்கு பின்னர் அஜித், தென்னரசு இருவரும் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் இருப்பது வல்லம் போலீசாருக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து வல்லம் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அப்பு கொலை சம்பவத்தில் கூலிப்படையாக செயல்பட்ட அஜித்,தென்னரசு இருவரையும் சேலம் மத்திய சிறையில் இருந்து நேற்று முன் தினம் இரவு வல்லத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கெண்டனர்.
போலீஸார் விசாரணையில் அஜித்,தென்னரசு இருவரும் அப்புவை கொலை செய்து விட்டு பைக்கில் தப்பி நாமக்கல் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அப்பு கொலை வழக்கில் வல்லம் போலீஸார் அஜித், தென்னரசு இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் போலீஸார் நேற்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.