தஞ்சாவூரில் தமிழ்நாடு மனநல மருத்துவ சங்கம், தஞ்சாவூர் மனநல மருத்துவ சங்கம் சார்பில் உளவியல் ரீதியாக மனநல பிரச்னைகளை எவ்வாறு அணுகுவது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. பன்னீர்செல்வன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுதல், போதைப் பொருள்களை உபயோகப்படுத்துதல், தற்கொலை எண்ணம் மற்றும் தற்கொலை முயற்சி போன்ற மனநல பிரச்னைகள் காணப்படுகின்றன.
தேசிய குற்ற ஆவண காப்பகத் தகவலின்படி, இந்தியாவில் 6 முதல் 7 சதவீத சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், பிகார் ஆகியவற்றுக்கு அடுத்து நான்காவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாட்டில் 16.4 சதவீத இளம் பருவத்தினர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இளம் பருவத்தினரிடம் போதைப்பொருள் பழக்கம் ஏறத்தாழ 15 சதவீதம் உள்ளது. 15 வயதுக்கு உள்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் ஒரு முறையாவது போதைப் பொருளைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதில், புகையிலை பயன்பாடு 83.2 சதவீதமாகவும், மது 67.7 சதவீதமாகவும், கஞ்சா 35.4 சதவீதமாகவும், உள்ளிழுக்கும் மருந்துகள் 34.7 சதவீதமாகவும் உள்ளன. மாணவர்களின் இறப்புக்கு சாலை விபத்துக்கு அடுத்து இரண்டாவது காரணமாக தற்கொலை உள்ளது. ஒரு லட்சம் மாணவர்களில் 6 முதல் 8 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆண்களை விட பெண்களே அதிகமாக தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதற்கு மன அழுத்தம், போதைப் பொருள் பயன்பாடு, பெற்றோர்கள், ஆசிரியர்களைத் திருப்திபடுத்த முடியாதது போன்றவை முக்கிய காரங்களாக உள்ளன.
குழந்தைகளின் வன்முறைக்கு வறுமை, போதைப்பொருள் பயன்பாடு, வீட்டில் வன்முறை, தார்மீக வழிகாட்டல் இல்லாமை, மேற்பார்வை இல்லாமை, சக மாணவர்கள் கொடுக்கும் அழுத்தம், படிப்புத் திறன் குறைபாடு, ஊடகத்தின் பங்கு போன்றவையே காரணம்.
இதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசுடன் இணைந்து தமிழ்நாடு மனநல மருத்துவ சங்கமும் பள்ளி, கல்லூரிகளில் மன நல ஆலோசனை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளது என்றார் பன்னீர்செல்வன். அப்போது, தஞ்சாவூர் கிளைச் செயலர் பாபு பாலசிங், பொருளாளர் ராதாகிருஷ்ணன், ஊடகப்பிரிவு செயலர் கார்த்திக் தெய்வநாயகம், மனநல மருத்துவர்கள் ராஜகோபாலன், வெங்கசேடன், இளங்கோவன், இக்பால் ஷெரீப், அருட்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.