பொதுமக்களிடம் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை நேரு விளையாட்டு அரங்கம் முன்பாக இந்திய மனநல மருத்துவ சங்கம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. 3 கிலோமீட்டர், 5கிலோ மீட்டர், 10கிலோமீட்டர் என மூன்று பிரிவாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியினை முன்னாள் டி.ஜி.பி.ரவி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஓடினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் முன்னாள் டி.ஜி.பி. ரவி கூறியதாவது: போதை மருந்துக்கு அடிமையானவர்ககளை அடையாளம் கண்டு அவர்களுக்கு மன நல ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். காவல்துறையின் நடவடிக்கையால் தமிழகத்தை பொறுத்தவரை போதை பழக்கம் இப்போது குறைந்து கொண்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் போதை பொருட்களை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மனநலம் குன்றியவர்கள் தான் கொலையாளிகளாக மாறுகிறார்கள். சமூக நலத்தை சரி செய்வதற்கு தான் போலீஸ் என்கவுண்டரை பயன்படுத்துகிறார்கள். காவல்துறையிடம் துப்பாக்கி இருப்பது மக்களை பாதுகாப்பதற்கும், குற்றவாளிகளுக்கு எதிராக, சரியான திறன் வரும்போது பயன்படுத்துவதற்கு தான்.
காவல்துறை, அரசு அதிகாரிகளுடைய மன நலம்,உடல் நலம் நன்றாக இருக்கும் பட்சத்தில் மக்களுக்கு நன்றாக சேவை செய்ய முடியும் என தெரிவித்தார்.