மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் நேற்று மறைந்தார். அவருக்கு வயது 82. ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1970 ஆம் ஆண்டு நிறுவி கோயில் கருவறைக்கு சென்று பெண்கள் நேரடியாக வழிபாடு செய்யும் முறை இவர் ஏற்படுத்தினார். மாதவிலக்கு நாட்களிலும் இங்கு தடை இன்றி வழிபடலாம் என்பது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் சக்தி மாலை அணிந்து இருமுடி சுமந்து மேல்மருவத்தூர் வந்து ஆதிபராசக்தி அம்மனை வழிபட தொடங்கினர்.
பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவினார். இதன் மூலம் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் ,பள்ளிகள் ஏராளமான கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அறக்கட்டளை மூலம் சுற்றுப்புற கிராமங்கள் உட்பட பல பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வந்தார். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் நேற்று உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டதால் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் மேல்மருவத்தூரில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டுள்ளது. பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் வருவதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. மிதமான வேகத்தில் வாகனங்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் உண்டாகியுள்ளது.