Skip to content
Home » மேகதாது அணைதிட்டம்….உறுதியோடு எதிர்ப்போம்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

மேகதாது அணைதிட்டம்….உறுதியோடு எதிர்ப்போம்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்  கூறியதாவது:

வேளாண்மை சாகுபடி நிலப்பரப்பிலும், உற்பத்தியிலும் கடந்த 2 ஆண்டுகள் தமிழ்நாடு அரசு சாதனை படைத்தது. கடந்த 2022-23ல் 5.36 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும் 13.53 லட்சம் ஏக்கரில்  சம்பாவும் சாகுபடி செய்யப்பட்டு, 41.45லட்சம் டன்  நெல் உற்பத்தி செய்யப்பட்டு   வேளாண் புரட்சி தொடர்ச்சியாக நடந்தது.அதுபோல இந்த ஆண்டும் விவசாயிகள் சாதனை படைப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்.  இந்த மண்ணையும், மக்களையும் காப்போம்.

தூர்வாரும் பணி 96% முடிந்து விட்டது. இன்னும்  உள்ள 4 சதவீத பணிகள் சில தினங்களில் முடிவடைந்து விடும். வரும் 12ம் தேதி இந்த ஆண்டு  குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்க  இருக்கிறேன்.

மேகதாதுவில் அணை கட்டுவோம் என இப்போது கர்நாடகத்தில் புதிதாக வந்திருக்கிற  காங்கிரஸ் ஆட்சி மட்டுமல்ல, ஏற்கனவே இருந்த பாஜக ஆட்சியும் சொல்லிக்கொண்டு தான் இருந்தது. அதை கலைஞர் எப்படி உறுதியுடன் எதிர்த்தாரோ, அதே உறுதியுடன் தான் நாங்களும் இருக்கிறோம்.  அதில் எந்த சந்தகேமும் வேண்டாம்.

கவர்னரை மாற்ற மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பீர்களா என்ற கேட்டபோது, நாங்கள்  நினைப்பதெல்லாம் நடந்தால் இந்த பிரச்னையே இல்லை என்றார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். தற்போதுள்ள சென்னை பல்கலைக்கழகத்திற்கு  கருணாநிதி பெயரை சூட்டுவதா, அல்லது  புதிதாக உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு அந்த பெயரை சூட்டுவதா என்பதை ஆலோசித்து முடிவு செய்வோம்.

இந்த ஆண்டு 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இலவச மின்சாரம் மற்றும் விவசாயம், கைத்தறிகளுக்கான மின்சாரம் அப்படியே தொடரும்.  வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே குறைந்த அளவில் உயர்த்தி உள்ளோம். மத்திய அரசு 4.07%  கட்டணம் உயர்த்தும்படி கூறிய நிலையில்  தமிழக அரசே அதை ஏற்றுக்கொண்டு, நாங்கள் 2.18% தான் உயர்த்தி உள்ளோம். அதுவும் அதிமுக ஆட்சி உதய் திட்டத்தில் கையெழுத்திட்டதால் இந்த நிலை.

பீகார் தலைநகர் பாட்னாவில் 23ம் தேதி நிதிஷ்குமார் கூட்டியுள்ள  அனைத்து  எதிர்க்கட்சி  தலைவர்கள் கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே. என்.நேரு , பன்னீர்செல்வம், மகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!