டென்மார்க் நாட்டிற்கு அரசு முறை பயணமாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்றிருந்தார். பயணத்தை முடித்துக்கொண்டு அவர், நேற்று இரவு 9 மணிக்கு சென்னை திரும்பினார். அப்போது அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நீர்வளத் துறையில் தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது என்பதில் உலகத்திலேயே முன்னோடியாக இருப்பது டென்மார்க். அது போன்று தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆறுகளையும், சீரமைக்க வேண்டிய எண்ணம் அரசுக்கு உள்ளது. எனவே அந்த நாட்டு நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசினோம். அப்போது அவரிடம் நம் மாநிலத்தின் நிலைமைகளை எடுத்து கூறினோம். ஒரு வாரத்திற்குள் டென்மார்க் அதிகாரிகள், தமிழ்நாட்டிற்கு வருவார்கள். பின்னர் ஆறுகள் சீரமைப்பு குறித்து ஒரு திட்டம் வகுக்கப்படும்.
காவிரி மேலாண்மை வாரியத்திடம் காவிரியின் நிர்வாகத்தை உச்ச நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது. வழக்கு தீர்ந்து இதுதான் முடிவு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருக்கக்கூடிய நீர்நிலைமை என்னவென்று எனக்கு தெரியாது. தமிழக அரசு, கர்நாடக அரசிடம் பேச முடியாது. பேசினாலும் அது தப்பு. அது முடிந்து போன விவகாரம். தமிழ்நாடு சார்பில் கவனிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் ஒரு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. நான் இன்று காலை தமிழக முதல்வரை சந்திக்க உள்ளேன். மீண்டும் நானே டில்லி சென்று, காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திப்பேன். எந்த காரணத்தைக் கொண்டும், மேகதாதுவில் அணைகட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. சட்டப்படியும் அது முடியாது. வேண்டுமென்றால் அவர்கள் அணைகட்டி விடுவோம் என்று பேசிக்கொண்டே இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில், அது கர்நாடகாவின் அரசியல் ஸ்டண்ட். அவர்களால் ஒன்றும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.