மும்பையை சேர்ந்த மெகுல் சோக்ஸி. பெரும் நகை வியாபாரி. வைர வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தார். இந்தியா முழுவதும் 4 ஆயிரம் நகைக்கடைகள் நடத்தி வந்தார். இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடியில் ஈடுபட்டதாக வைர வியாபாரி மெகுல் சோக்ஸி மீது புகார் எழுந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை தவிர்ப்பதற்காக 2018-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து அவர் தலைமறைவானார்.
அவர் ஆன்டிகுவா தீவில் தஞ்சமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வந்தன. இந்தச் சூழலில், ஆன்டிகுவா தீவில் இருந்து சிகிச்சை பெறுவதற்காக அவர் பெல்ஜியம் வந்தார். கடந்த ஆண்டு முதல் அவர் பெல்ஜியத்தில் இருந்து வருகிறார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி, பெல்ஜியத்தில் அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவின் நாடு கடத்தல் தொடர்பான கோரிக்கையை ஏற்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் சார்பில் மும்பை நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை சுட்டிக்காட்டி இந்தியா தரப்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது
நிதி மோசடி காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு தேசத்தை விட்டு தப்பியோடிய மெகுல் சோக்ஸி, பெல்ஜியம் நாட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த 12-ம் தேதி அந்த நாட்டு அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். அவரை பெல்ஜியம் போலீஸார் கஸ்டடியில் எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை இந்திய அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நாடு கடத்துவது தொடர்பாக கடந்த 2024 செப்டம்பர் மாதம் இந்திய அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது அவரது தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர்கள் அவரது உடல் நிலை பயணத்துக்கு ஒத்துழைக்காது என சொல்லி இருந்தனர். ஆன்டிகுவா தீவில் இருந்து சிகிச்சைக்காக விமானத்தில் அவரால் பெல்ஜியம் வர முடிகிறது. அது போல இந்தியாவுக்கும் வரலாம். அங்கு அவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படும் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் அவரை நாடு கடத்துவது பெரிய செயல்முறை என்ற தகவல் கிடைத்துள்ளது. அதை தடுக்க பெல்ஜியம் நாட்டின் சட்டத்தில் உள்ள அனைத்து வாய்ப்புகளை மெகுல் சோக்ஸி தரப்பு நாடும் என தகவல் கிடைத்துள்ளது. மேலும், மருத்துவ காரணங்களின் அடிப்படையில் அவர் ஜாமீனுக்கு விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.