ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள கணிமண்குண்டு கடற்கரை பகுதியில் தங்க கடத்தல் அதிக அளவு நடப்பதாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சி சுங்கத்துறை இணை ஆணையர் கே. எம். ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இலங்கையில் இருந்து படகுகளில் தங்கம் கடத்தி வந்த சில நபர்களை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம்
இருந்து14.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.8 கோடியே 92 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலத்தில் இதைப்போன்ற மெகா வேட்டை நடத்தப்பட்டதில்லை என கூறப்படுகிறது. தங்கம் கடத்திய நபர்களை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிகப்பெரிய தங்கவேட்டை நடத்தி, கடத்தல் காரர்களை கைது செய்த இணை ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் குழுவினரை திருச்சி சுங்க இலாகா முதன்மை ஆணையர் கே. ஆர். உதய் பாஸ்கர் வாழ்த்தி பாராட்டினார்.