கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழக எல்லை பகுதிகளில் கொட்டிவிட்டு செல்வது வழக்கமாகி வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களூக்கு முன்னர் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லையில் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்த நிலையில், கேரளாவில் இருந்து வந்த அதிகாரிகள் அதனை ஆய்வு செய்து பின்னர் லாரி மூலம் கேரளாவிற்கே கொண்டு சென்றனர்.
இந்த நிலையில், நெல்லையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் கேரள அரசுக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது. மருத்துவமனை, ரிசார்ட்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பிய தீர்ப்பாயம், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பதை 7 நாட்களில் தெரிவிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கேரள அரசின் நடவடிக்கை திருப்தி அளிக்காவிட்டால், தீர்ப்பாயமே உத்தரவு பிறப்பிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கழிவுகள் கொண்டு வருவதை தடுக்க எல்லை மாவட்டங்களில் சிறப்பு அதிரடிப்படையை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.