தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சென்னையில் காத்திருப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றவில்லை. இதனால் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் மாவட்ட தலைவர் வள்ளி, செயலாளர் சாய் சித்ரா ஆகியோர் தலைமையில் அளித்த மனுவில் தெரிவித்து உள்ளதாவது:
மாத ஊதியம் ரூ.5500 லிருந்து 10 ஆயிரம் என உயர்த்தி வழங்க வேண்டும். மாத ஊதியம் மிகவும் தாமதமாக வழங்குவதை தவிர்த்து மாதம் 5ம் தேதி கட்டாயம் வழங்க வேண்டும். ஸ்கோர் சீட் மார்க் என்ற பெயரில் ஊதிய பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். பணிவரன்முறை செய்ய வேண்டும்.
மாத ஊதியத்தை ஊழியர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்க வேண்டும். மகளிர் மேம்பாட்டு நல வாரியம் மூலம் மாவட்ட அளவில் கிராமபுறம் வாழ்வாதார இயக்கம் என்ற பெயரில் ஆய்வு கூட்டம் என்ற பெயரில் ஊழியர்களை கட்டாயப்படுத்தி வரவழைக்கக் கூடாது. பணி காலத்தில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். மரணமடைந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பிளட் பிரஷர் செக்கப் கருவி உபபொருள் பராமரிப்பு செலவை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். போக்குவரத்து படி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.