மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளை 6ம் தேதி தஞ்சை அருகே வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிழக்கில் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன் பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளி ஏற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் நாளை தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக வட்டார வள மையம், தஞ்சாவூர் ஊரகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வல்லம் கிழக்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் 18 வயது வரை உள்ள அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தேசிய அடையாள அட்டை(NID), UDID அட்டை பதிவு செய்தல், முதலமைச்சரின் காப்பீடு திட்ட பதிவு, தேவைப்படும் இலவச உபகரணங்களுக்கான மருத்துவர்களின் பரிந்துரை, அறுவை சிகிச்சைக்கான மருத்துவர்களின் பரிந்துரை ஆகிய பயன்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்