மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த செய்யது தாகிர் உசேன் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கை குறித்து, மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரத்தினவேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மயக்கவியல் துறை துணை பேராசிரியர் செய்யது தாகிர் உசேன், தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக 41 பெண்கள் வாய்மொழியாக புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. ராஜாஜி அரசு மருத்துவமனை துணை முதல்வர் டாக்டர் தனலட்சுமி தலைமையிலான விசாகா குழுவினர், இந்த விசாரணையை நடத்தினர்.
கடந்த 10-ந் தேதி விசாரணை தொடங்கி 12-ந் தேதி வரை நடந்தது. புகார் கூறியவர்களில் 21 மருத்துவ மாணவிகள், ஒரு செவிலியர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்கள், விசாகா கமிட்டி முன்பாக விசாரணைக்கு ஆஜரானபோது, ஒருவித அச்சத்தோடு இருந்தனர். செய்யது தாகிர் உசேன் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாகவும், கேலியான பெயரை கூறி அழைத்ததாகவும், ஆபரேசன் தியேட்டருக்கு செல்லவே தயக்கமாக இருந்ததாகவும் விசாரணையின்போது, பெரும்பாலானவர்கள் கூறினர்.
விசாகா கமிட்டியின் அறிக்கை முடிவு மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டது. ராஜாஜி அரசு மருத்துவமனையில் 62 சதவீதம் பெண் பணியாளர்கள் உள்ளனர். செய்யது தாகிர் உசேன் மீது 2019-ம் ஆண்டு முதல் பல்வேறு புகார்கள் வந்தன. ஆனால் எழுத்துப்பூர்வமாக கிடைக்கவில்லை. ஆனால் தற்போது 23 மாணவிகள் கைப்பட எழுதி புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எங்களுக்கு பழிவாங்கும் நோக்கம் இல்லை. பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக செய்யது தாகிர் உசேன் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. இதுவரை எழுத்துப்பூர்வமாக அளித்த அனைத்து புகார்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.