இறைச்சி சாப்பிடுவது குறித்தான பல்வேறு விவாதங்கள் அவ்வப்போது எழுந்து வருகிறது. இதுகுறித்து பிரபலங்கள் பேசும்போது, அதுபற்றிய கவனம் இன்னும் கூடுதலாகவே இருக்கும். அப்படித்தான் இறைச்சியின் முக்கியத்துவம் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் தனியார் உணவகத்தின் திறப்பு விழா ஒன்றில் பேசியிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து அவர் பேசுகையில், “ஒரு தலைமுறை சிறுவயதில் சாப்பிடும் உணவுகள் தான் அந்த தலைமுறையையே தீர்மானிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. என்னுடைய தலைமுறைக்கும் சரி, எனக்கு அடுத்த தலைமுறைக்கும் சரி உணவால் நிறைய பிரச்சினைகள் வந்துள்ளது. இதனால் உணவு மற்றும் சமையல் தரம் ஆகியவற்றை மறுசீரமைப்புக்கு உட்படுத்தி தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
மனித வளர்ச்சியில் இறைச்சி இன்றியமையாதது. இந்த விஷயம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இறைச்சி உணவு என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. ஆனால், இன்றைய சூழலில் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறிவிட்டது. நான் நிறைய இறைச்சி சாப்பிடுபவன் என்பதாலேயே இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசுகிறேன்” என்றார்.