மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் தலைமை அலுவலகமாக தாயகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், ஆளுநர் ரவியின் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழாவை திறந்த வெளிமாநாடாக செப்டம்பர்-15,2023 அன்று மதுரை மாநகரில் சிறப்பாகக் கொண்டாடுவது என்று கழக நிர்வாகக்குழுத் தீர்மானிக்கிறது.
அரசியலமைப்பு சட்டத்தின் 154 ,163 ,164 ஆகிய பிரிவுகளின் கீழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தனக்கு அதிகாரம் இருப்பதாக ஆளுநர் ஆர். என். ரவி கருதிக் கொண்டிருக்கிறார்.
ஆளுநர் குறிப்பிட்டு இருக்கிற சட்டப்பிரிவுகளின் கீழ் வானளாவிய அதிகாரம் எதுவும் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை.தமிழ்நாட்டில் அரசியல் குழப்பம் விளைவிக்க முனைந்து வரும் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இதனை வலியுறுத்தியே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் குடியரசு தலைவருக்கு ஆளுநரை திரும்ப பெற கையெழுத்து இயக்கத்தை ஜூன் 20 ம் தேதி தொடங்கி மக்கள் இயக்கமாக நடத்தி வருகிறது.
ஆளுநருக்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் பேராதரவை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். கையெழுத்து இயக்கத்தை விரைவு படுத்த கழக நிர்வாக குழு கேட்டுக் கொள்கிறது.
மேகேதாட்டு அணை கட்டப்படுமானால், காவிரிப் படுகைப் பகுதிகள் பாலைவனம் ஆகி விடும்.எனவே ஒன்றிய அரசு மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக் கூடாது.
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை விரைவுப் படுத்தி, கர்நாடகா மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று மதிமுக நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதித் தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ‘நெக்ஸ்ட்'(National Exit Test- NExT) தேர்வு நடத்த, தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது.
நெக்ஸ்ட் தேர்வை அறிமுகப்படுத்துவது என்பது கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், பள்ளிக்கல்வி அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு முறை, மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
எனவே நெக்ஸ்ட், மருத்துவ தகுதித் தேர்வு நடத்தும் முடிவை தேசிய மருத்துவ ஆணையம் கைவிட வேண்டும் என்று கழக நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது.
தமிழக அரசால் வழங்கப்படும் கரும்பு பயிர் காப்பீடு திட்டம் மூலம் அனைத்து மாவட்ட விவசாயிகளும் பயன் பெறும் வகையில் வேளாண்மை துறையில் திருத்தம் செய்ய வேண்டும்.
நமது மாநிலத்தில் சர்க்கரை தேவை 15 லட்சம் மெட்ரிக் டன்கள். ஆனால் 10 லட்சம் மெட்ரிக் டன்கள் சர்க்கரை மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒன்றிய அரசு அண்மையில் கரும்புக்கான அடிப்படை ஆதார விலையை 10.25 சர்க்கரை கட்டுமானத்திற்கு குவின்டால் ஒன்றுக்கு ரூபாய் 10 உயர்த்தி டன் ஒன்றுக்கு ரூபாய் 3150 என விலை அறிவித்திருக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில் சர்க்கரை கட்டுமானம் என்பது 9.5 மற்றும் அதற்கு குறைவாகவே உள்ளது.
கடந்த 2021 22 அரவைப் பருவத்தில் ஒன்றிய அரசு அறிவித்த 3050 ரூபாய் விலையில் தமிழக விவசாயிகளுக்கு 9.5 சர்க்கரை கட்டுமானத்திற்கு கிடைத்த தொகை 2821. 25 ரூபாய் மட்டுமே. மாநில அரசாங்கம் கடந்த ஆண்டு 195 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியது.
(2821.25+195=3016.25) ஆனால் தற்போது ஒன்றிய அரசு ஒரு குவின்டால் கரும்பிற்கு 10 ரூபாய் மட்டும் உயர்த்தி அறிவித்திருக்கிறது.
இது கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருக்கும் விவசாயிகளுக்கு வேண்டுமானால் பயனுள்ளதாக இருக்கலாம். காரணம் கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சர்க்கரை கட்டுமானம் என்பது மத்திய அரசாங்கம் அறிவித்திருக்கும் 10.25 க்கு அதிகமாக வருகிறது.
ஒன்றிய அரசு அறிவித்துள்ள குவின்டால் ஒன்றுக்கு 10 ரூபாய் என்பதனை உயர்த்தி, 50 ரூபாயாக வழங்குவதற்கும் குறைந்தபட்ச கட்டுமானம் 9.5 என்பதனை மாற்றி அமைக்கவும் வேண்டும்.
இதனால் ஒன்றிய அரசு அறிவிக்கும் விலை தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காமல் தமிழக கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மாறி வரும் நிலை உருவாகி வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
கடந்த 2018 ம் ஆண்டு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21ஆவது சட்ட ஆணையம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் இல்லை. தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல என்று தெரிவித்தது.
185 பக்கங்கள் கொண்ட அந்த ஆலோசனை அறிக்கையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் நாட்டில் நிலவும் பன்முகத்தன்மைக்கு மதச்சார்பின்மை முரண்பட முடியாது. நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை என்பதை பொது சிவில் சட்டம் மூலம் சமரசம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அது தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஆகிவிடும் என்று தெரிவித்திருந்தது.
இருப்பினும் திருமணம், விவாகரத்து தொடர்பான சட்டங்கள் சிலவற்றை பொதுவானதாக பல்வேறு மதங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கூறியுள்ள நிலையில், பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மோடி.
நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைத்து வரும் ஒன்றிய பாஜக அரசு, பொது சிவில் சட்டத்தை செயற்படுத்த துடிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும். இந்த முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 1 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த கல்வி உதவித் தொகையினை 2022-2023 ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு திடீரென ரத்து செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து வழங்கிட வேண்டும்.
எனவே, 1 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை திட்டத்தினைக் கைவிடும் முடிவை ஒன்றிய அரசு நிறுத்திவைத்து, உடனடியாக அத்திட்டத்தினை மீண்டும் கொண்டு வரவேண்டும் என மதிமுக வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப் படுத்த படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கோரி வரும் நிலையில், நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும் மதுக்கடைகளை முன்கூட்டியே திறக்க முயல்வது ஏற்கத்தக்கது அல்ல. அம்முயற்சியை கைவிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியிறுத்துகிறது.
மேற்கண்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.